மருத்துவமனை துப்புரவு பணியாளரை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் அருண் வெளி நபர்களால் தாக்கப்பட்டதனால் அவர்களை கைது செய்ய கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடும்படி கூறியுள்ளனர்.
ஆனால் துப்புரவு பணியாளர்கள் கூறும்போது “பாதிக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர் அருணுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் நாங்கள் வேலைக்கு திரும்பப் போவதில்லை. மேலும் அருணை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே தர்ணாவில் ஈடுபடுவோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தாக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர் அருண் கூறுகையில் “கொரோனா காலகட்டம் என்பதால் மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் எச்சரித்தபடி உள்ளே யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. அதன்படி நாங்கள் கட்டுப்பாடுகளுடன் பணி செய்து கொண்டிருந்த வேளையில் இரண்டு வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கேட்டை திறக்கும்படி கூறினர்.
ஆனால் நாங்கள் தற்போது அனுமதி இல்லாததால் பிறகு வருமாறு கூறினோம். அதையும் கேட்காமல் அவர்கள் தங்களது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு முன்பாக வரச்சொன்னார்கள். அவ்வாறு அனைவரும் சேர்ந்து எங்கள் மேல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.