டெங்கு காய்ச்சல் காரணத்தினால் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜீவலதா உள்பட இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஜீவலதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குணமடையாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் இங்கே உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டெங்கு காய்ச்சல் காரணத்தினால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த ஜீவலதாவின் பெரியப்பா சுதாகர் கூறும் போது, பனப்பாக்கம் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அதிகமான நபர்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையும் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் சேர்ந்த டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை முகாம்களை அமைத்து தீவிர சோதனைகள் நடத்தி உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.