தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வரும் நிலையில் சில தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொழில் துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வல்லுநர் குழு பரிந்துரையின் படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது,
சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும் என கூறியுள்ளார். மனித குல வரலாற்றில் மிகப் பெரிய சவாலான பேரிடர் கொரோனா வைரஸ் என கூறிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1500 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன என கூறிய முதல்வர் தொழில்துறையை மேம்படுத்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், 24 மணி நேரத்தில் தொழில் துறை அனுமதி வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் கடனுதவி எளிதில் கிடைப்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். கொரோனோவால் இடம் பெயரும் தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய முதலீடுகளை ஈர்க்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொழில் துறையினர் சந்திக்க விரும்பினால் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிய தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367.05 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.