ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, காந்திரோடு, பேருந்து நிலைய பகுதிகள், மூங்கில் மண்டபம் என நகரின் முக்கியமான பகுதிகளுக்கு யாரும் செல்ல இயலாதவாறு காவல்துறையினர் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் நகரின் சந்துகள், சிறு தெருக்கள், போன்ற எல்லா பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவில் பெரிய கற்கள் மூலமாக தடுப்புகள் அமைத்துள்ளனர்.
இதனை அடுத்து பேருந்து நிலைய பகுதிகளில் காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் காலை 10 மணிக்கு மேல் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மூங்கில் மண்டபம் பகுதியில் காவல்துறை இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் காவல்துறையினர்கள் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.