ராமநாதபுரம் அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த நபர் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைச்செல்வி. கலைச்செல்வி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலைச்செல்விக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் அரசு மருத்துவமனையிலும், அதன்பின்,
தனியார் மருத்துவமனையிலும் சேர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் கலைச்செல்வி சிகிச்சை பெற்று வந்த நிலையில், உங்களுக்கு குணமாகிவிட்டது நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், அவர் வீட்டிற்கு வந்து மீண்டும் தொடர் கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இதனிடையே இன்று காலை அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பின் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அதற்கான காரணம் என்ன ஒருவேளை வீட்டிற்கு திரும்பியவுடன் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? என அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த கலைசெல்விக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளதை கணக்கில் கொண்டு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை அவர்களது குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.