இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதில் அளித்துள்ளார். அவர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் டிஜிட்டல் மயமாக்குதல், தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கியங்கள் மற்றும் இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி எம்எஸ்எம்இ உதயம், எம்எஸ்எம்இ சாம்பியன்ஸ் மற்றும் ஜெம் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளில் உருவாக்கியுள்ளது. அதன் பிறகு சிறு, குறு, தொழில் நிறுவனங்களிடமிருந்து மத்திய பொதுத்துறை செய்யும் கொள்முதலை கண்காணிப்பதற்காக எம்எஸ்எம்இ சமா பந்து என்ற தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டணங்களை செலுத்துவதற்கு தாமதமாகும் பட்சத்தில் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய எம்எஸ்எம்இ சமாதான் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சிறு, குறு, நடுத்தர நிறுவன வசதி கவுன்சில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.