சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், விஸ்வரூப தீபாராதனையும் நடைபெற்றது. இதனை அடுத்து உருகு சட்ட சேவை நடந்த பின்னர், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு சென்று தரிசனம் வழங்கினார். அப்போது சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு தீபாராதனை நடத்தப்பட்டது.
மேலும் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து தரிசனம் வழங்கியுள்ளார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து வள்ளி தெய்வானை அம்பாளுடன் சண்முகருக்கு செம்மலர்கள் சூடி தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாளுடன், சுவாமி சண்முகர் எட்டு வீதிகளிலும் உலா வந்ததை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்துள்ளனர்.