Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… வழிபாடு நடத்த சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த விபரீதம்… மியான்மரில் சோக சம்பவம்..!!

மியான்மரில் புத்த மடாலயம் ஒன்றில் வழிபாடு நடத்துவதற்காக படகில் சென்ற பக்தர்கள் கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரின் மோன் மாகாணத்தில் பழமையான புத்த மடாலயம் ஒன்று தன்புசாயத் என்கின்ற சிறிய தீவில் அமைந்துள்ளது. மேலும் கடலுக்கு நடுவில் இந்த மடாலயம் அமைந்துள்ளதால் மக்கள் படகுகளில் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மடாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று காலை ஏராளமான பக்தர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எழுந்த ராட்சத அலை ஒன்றில் நிலைதடுமாறிய பக்தர்கள் நீரில் விழுந்துள்ளனர்.

இதையடுத்து அந்த ராட்சத அலை பக்தர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றதால் பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் படகுகளில் சென்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட பக்தர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மீட்புக் குழுவினரால் 15 பேரை சடலமாக தான் மீட்க முடிந்தது. அதேசமயம் மீட்புக்குழுவினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சில பக்தர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதற்கிடையே சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் உயிருடன் உள்ளார்களா ? அவர்களுடைய நிலைமை என்ன ? என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் முழு நம்பிக்கையுடன் மீட்புக்குழுவினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் மியான்மரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |