மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கோயிலை நிர்வகிக்கும் கேரள தேவசம் போர்டின் தலைவர் என். வாசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பக்தர்கள் கூட்டமும் வருமானமும் கோயிலில் அதிகரித்துள்ளது. 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்தி 533 ரூபாய் வருவாய் கடந்த ஆண்டு ஈட்டப்பட்டது.
3.32 கோடி ரூபாய் வருவாய் இந்த ஆண்டு ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 1.28 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, அப்பம், அரவணை, கோயிலில் வைக்கப்பட்டுள்ள கடைகளின் மூலம் ஈட்டப்படும் வருவாயும் அதிகரித்துள்ளது. அரவணையை விற்றது மூலம் 1.20 கோடி ரூபாயும், அப்பம் விற்றது மூலம் 14 லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. உண்டியலின் மூலம் இதுவரை 1 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னையால் கடந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கேரள தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோயில்களின் உண்டியல்களில் காணிக்கை செலுத்த வேண்டாம் எனவும் அப்பம், அரவணை ஆகியவற்றை வாங்க வேண்டாம் எனவும் கடந்த ஆண்டு பரப்புரை செய்யப்பட்டது. இதுபோல் இந்த ஆண்டு நடைபெறாததால் வருவாயில் அது எதிரொலித்துள்ளது” என்றார்.