சென்னை குரோம்பேட்டையில் டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பக்தி பரவசத்துடன் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக சுற்றி வந்த அந்த இளைஞர் திடீரென குனிந்து கொண்டே மேல்தளத்தில் இருக்கக்கூடிய கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு மொபைல் ஒன்றை திருடி கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்பின் கோவில் நிர்வாக அலுவலகத்திற்குள் செல்லும் பொழுது செல்போன் திருடு போனதை கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் பக்தி பரவசத்துடனும், டிப்டாப் உடையுடனும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டை அணிந்து கொண்டு பக்தி பழமாக சுற்றி வந்து கொண்டிருந்த இளைஞர் திருட்டுத்தனமாக மாடி ஏறி செல்போனை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன்பின் காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நபரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.