தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக போலீசார் பாதுகாப்பில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.