நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், தற்போது அதற்கு மறுப்பு கூறியுள்ளது.
நிதி கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அந்த அமைப்பு பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைத்து, நிரந்தரமாக நிதி உதவி பெறுவதற்கு தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்வதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயர் இடம்பெற்றுள்ளதால், கராச்சியில் தாவூத் இருப்பதனை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தாவூதின் வங்கி கணக்குகள் மூடப்படும் என்றும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், வெளியான இந்த செய்திகள் அனைத்தும் தவறானது என்றும், திசை திருப்பும் முயற்சியில் இதனை செய்ததாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஐநா சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளின் பட்டியல் அடிப்படையில் மட்டுமே, பாகிஸ்தான் பிரான்ஸ் நிதி அமைப்புக்கு பட்டியல் அனுப்பியதாகவும், அதில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பது குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.