ஐபிஎல் தொடரில் நேற்று (அக்டோபர் 17) நடந்த 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வாட்சன் – டூ பிளேசிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாட்சன் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாப் டூ பிளேசிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து 58 ரன்களை எடுத்திருந்த டூ பிளேசிஸ் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த தோனியும் மூன்று ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.இறுதியாக அம்பத்தி ராயூடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும் சிக்சர்களை பறக்கவிட்டு அணிக்கு உதவினார்.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 58 ரன்களையும், அம்பத்தி ராயூடு 45 ரன்களையும் எடுத்தனர். 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் பிரித்திவி ஷா ரன் எடுக்காமல் தீபக் ஷகர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரஹானே 8 ரன்னில் வெளியேற அணியின் ஸ்கோர் 2விக்கெட் இழப்புக்கு 26 ரன்னில் திணறிக்கொண்டு இருந்த போது கேப்டன் ஷிரேஷ் ஐயர் – ஷிகர் தவான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய தவான் அரைசதம் கடந்தார். ஷிரேஷ் ஐயர் 23, ஸ்டாய்னிஸ் 24 ரன்னில் ஆட்டமிழக்க தனி ஒரு வீரனாக நின்று ஷிகர் தவான் விளாசி சதம் கடந்தார். கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்சர்களை விளாசிய நிலையில் டெல்லி அணி 1 பந்து மீதம் இருக்க 195 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 58 பந்தில் 101 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும், அக்சர் பட்டேல் 5 பந்தில் 21 ரன்னும் எடுத்து அட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்றனர். சென்னை அணி தரப்பில் தீபக் ஷகர் 2 விக்கெட்டும், சம் கர்ரன், தாகூர், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.