பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பிரதமர் மோடி டி20 உலக கோப்பையில் விளையாடுமாறு தோனிக்கு கோரிக்கை வைக்கலாம் என்று கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. T-20 உலக கோப்பை ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் தோனி தனது ஓய்வு முடிவை விரைவாக அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது “ரசிகர்களின் ஆதரவு தோனிக்கு பெருமளவில் உள்ளது. 2021 டி20 உலக கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருப்பினும் ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. 2021 டி20 உலக கோப்பை வரை விளையாடலாம் என்று இந்திய பிரதமர் மோடி தோனியிடம் கோரிக்கை வைக்கலாம். மோடி கோரிக்கை வைத்தால் தோனியால் அதை மறுக்க முடியாது. பாகிஸ்தானில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. தோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம்.” என அவர் கூறியுள்ளார்.