ஐபிஎல் 2019 லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஒவொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. பெங்களூரு அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இப்படி இருக்கும் நிலையில் சென்னை அணியும், டெல்லி அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இதையடுத்து முதல் இடத்தில் நிரந்தரமாக அமர்வதற்கான போட்டியில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பெறும் அணிக்கு இறுதிச்சுற்றுக்கு செல்வதற்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே காய்ச்சல் காரணமாக மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத காரணத்தால் ஓய்வு எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தோனி இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தாண்டு தோனி இல்லாத 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.