மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக மட்டுமில்லாமல் மிக மர்மமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார். ஐபிஎல் 2020 சீசனுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸை செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற ஒரு பாணியில்தான் தோனி டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்தகைய பெரிய முடிவுகளை அவர் தொடர்ந்து எடுக்கும் நுட்பம் எப்போதுமே ரசிகர்களை ஏமாற்றும் விதமாகவே உள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல்போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தோனி தனது ஜெர்சியை பட்லருக்குக் கொடுத்தார், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலும் இதைச் செய்தார். ஹார்டிக் மற்றும் கிருனல் தோனியின் சட்டையுடன் ஒரு படத்தை வெளியிட்ட பிறகு, டி 20 லீக்கில் அவரது கடைசி சீசன் என்பதால் சிஎஸ்கே கேப்டன் அவ்வாறு செய்கிறாரா என்று பல ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கினர்.
இதனைதொடர்ந்து நேற்று, கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு மஹந்திர சிங் தோனி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை நிதிஸ் ராணா உள்ளிட்ட வீரர்களுக்கு பரிசாக அளித்தார். இதனால் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் தோனி 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.