இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க நினைக்கும் இளைஞர்கள், அங்கீகரிக்கப்படாத வேறு வலைத்தளத்தை நாடுகின்றனர். இதுபோன்ற இலவச சேவை வழங்கும் வலைத்தளங்கள் மிகவும் அபாயகரமானதாக இருக்கின்றன.
இந்த சூழலில் மெக்காஃபே ஆன்டி வைரஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்கையில், இணையத்தில் தங்களின் அபிமான பிரபலங்களின் பெயர்களை தேடுகையில் அவை பயனாளர்களை சில அபாயகரமான வலைத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரே முதலிடத்தில் உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும், இந்தி தொலைக்காட்சி நடிகரும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பட்டம் வென்றவருமான கௌதம் குலாத்தியும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், பாப் பாடகர் பாட்ஷா, நடிகை ராதிகா ஆப்தே, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து ஆகியோரும் உள்ளனர். மேலும் இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தில் போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.இதுகுறித்து பேசிய மெக்காஃபே நிறுவனத்தின் இந்தியாவுக்கான மேலாண்மை இயக்குநர் வெங்கட் கிருஷ்ணாபுர், இலவச சேவை வழங்கும் வலைத்தளங்களில் உள்ள ஆபத்து குறித்து தெரியாமல் இணைய பயனாளர்கள் அதை உபயோகிக்கின்றனர் என்றார்.