உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து விலகியிருந்தாலும் அவர் குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் பிசிசிஐ அண்மையில் வெளியிட்ட வீரர்கள் ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்பு ஏ கிரேடு ஒப்பந்தப் பட்டியலில் இருந்த தோனி இம்முறை ஒட்டுமொத்த ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பலரும் கருத்து கூறினர். ஆனால் தோனி, அதற்கு அடுத்த நாளே ஜார்க்கண்ட் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு, நான் மீண்டும் அணிக்கு வருவேன் என்பதை மறைமுகமாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
எனினும், பிசிசிஐயின் நடவடிக்கைகள் தோனியின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு முடிவு கட்டும்விதமாக இருப்பதால் அவர் மீண்டும் இந்திய அணியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, பிசிசிஐ முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார், அவர் இன்னும் எத்தனை நாட்கள் விளையாடுவார் என்பது போன்று தொடர்ந்து பலரும் பேசிவருகின்றனர். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தோனி இந்திய அணிக்கு விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார். அடுத்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை சிஎஸ்கே தக்கவைக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய தோனி, இதுவரை மூன்று முறை அந்த அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த சீசனிலும் இறுதிப் போட்டிவரை முன்னேறிய சென்னை அணி நூலிழையிலேயே கோப்பையைத் தவறவிட்டது. தற்போது சீனிவாசனின் இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்கள் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது 38 வயதாகும் தோனி, இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.