இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஜாலியாக பேசிய வீடியோ ஒன்றால் தோனி ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த உலகக்கோப்பைக்கு அரையிறுதிக்கு பின் முன்னாள் கேப்டன் தோனி எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் இன்னும் ஓய்வு முடிவு குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் குழப்பத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்தநிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சக வீரர்கள் அனைவரிடமும் சென்று, விளையாட்டாக பேட்டி எடுத்து கொண்டிருந்தார். சாஹல் டிவி-க்காக நீங்கள் பேட்டி கொடுங்கள் என்று ஒவ்வொரு வீரரிடமும் சென்று ஜாலியாக, கலகலப்பாக பேசி அவர்களின் சில தகவல்களை பெற்றார்.
ஒவொருவராக பேட்டியெடுத்துக்கொண்டே சென்ற சாஹல் அப்படியே பேருந்தின் கடைசி வரிசையில் ஜன்னல் இருக்கைக்கு சென்றார். அங்கே வைத்து இந்த சீட்டில் நாங்கள் யாருமே அமர மாட்டோம். ஏன் என்று கேட்கிறீர்களா? ஏனென்றால் கேப்டன் தோனி வழக்கமாக இந்த சீட்டில் தான் இருப்பார்.
இந்த இடம் அவருக்கானது. எனவே நாங்கள் யாரும் இந்த சீட்டை ஆக்கிரமிக்க மாட்டோம். நாங்கள் அனைவரும் தோனியை மிகவும் மிஸ் பண்றோம் என பேசினார். சாஹல் பேசிய இந்த வீடியோ குறிப்பாக தோனி ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.