Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா தேவியும் நடிகை கங்கனா ரணாவத்தும் கடுமையாக இந்திரா ஜெய்சிங்கை விமர்சித்திருந்தனர். இவ்விவகாரம் அடங்குவதற்குள்ளேயே இந்திராவை வைத்து அடுத்தொரு சர்ச்சையும் கிளம்பியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய அமைப்பிடம் நான்கு லட்சம் ரூபாயை இந்திரா ஜெய்சிங் பெற்றதாக வதந்தி பரவியது. இச்செய்தியை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இச்செய்தியை மறுத்து தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார்.

தான் பிஎஃப்ஐ அமைப்பிடமிருந்து பணம் வாங்கியதாக வெளியான செய்தியை முற்றிலுமாக மறுத்த அவர், சிஏஏவுக்கு எதிராகப் பேச தான் எந்த ஒரு தனிநபரிடமோ அல்லது அமைப்பிடமோ பணம் வாங்கவில்லை என்றார். மேலும், ஒரு செய்தியின் உண்மை நிலை தெரியாமல் வெளியிட்ட ஊடகங்கள் மீதும் அவதூறு பரப்பிய நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியதற்காக பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 27 பேரை உத்தரப் பிரதேச காவல் துறை கைதுசெய்தது. அமலாக்கத் துறை உள்துறை அமைச்சகத்துக்கு அளித்த தகவலில், சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கும் பிஎஃப்ஐ அமைப்புக்கும் நேரடி தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |