வித்தியாசமான முறையில் ஆழ் கடலுக்குள் நீந்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னதுரை என்ற பி.ஏ பட்டதாரி வசித்து வருகிறார். இவருக்கு கோயமுத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இவர்கள் இருவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது பணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் நீந்தியபடி செய்துகொள்ள விரும்பியதால் புதுச்சேரி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சி பள்ளியின் உரிமையாளரான அரவிந்த் என்பவரை சென்று பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நீலாங்கரை அருகே ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் நீந்தியபடி சின்னதுரை மற்றும் ஸ்வேதாவின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் பாதுகாப்பு வசதிகளுடன் ஆழ்கடலுக்குள் சென்று அதன் பின் ஆக்சிஜன் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு கடலுக்குள் குதித்து விட்டனர். அங்கு ஆழ் கடலுக்குள் இருக்கும் செடிகளில் உள்ள பூக்களை கொண்டு அமைக்கப்பட்ட மேடையில் மணமகள் நீந்தியவாறு மாலைகளை மாற்றிக் கொண்டு அதன் பின் மணமகன் ஸ்வேதாவுக்கு தாலி கட்டியுள்ளார்.
இதுகுறித்து சின்னத்துரை கூறும் போது, தான் ஆழ்கடலில் டைவிங் பயிற்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் கடலில் தற்போது அதிக அளவு கழிவுகள் கலந்து இருப்பதால் மாசு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் பொது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கடல் மாசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த முடிவு செய்து கடலில் நீந்தியபடி திருமணம் செய்து கொண்டோம் என தெரிவித்துள்ளார். மேலும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது வருகிற 13-ஆம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.