மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மேலும் முத்தலாக் தடை சட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக , பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.
அதே போல தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இந்நிலையில் மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு 99 பேர் ஆதரவு , 84 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி தெரிவித்த கருத்தில் , முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது.
It’s a shame that AIADMK walked out to facilitate the passing of the triple talaq bill in Rajya Sabha.#TripleTalaqBill
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 30, 2019