டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது.
தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது.
இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான வாக்காளர் அடையாள அட்டை. இதற்காக e-EPIC என பிரத்யேக செயலியை உருவாக்கி இன்று அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியின் உதவியுடன், இப்போது வாக்காளர் அடையாள அட்டைகளையும் ஆதார் அட்டைகளைப் போல ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதன்மூலம் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிய வாக்காளர் அட்டைகளை பெறுவதற்கு அல்லது பழைய அட்டைகளில் மாற்றங்களைச் செய்வதற்கு என அலைய வேண்டிய அவசியமில்லை. வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போனால், வெறும் ரூ.25 கட்டணம் செலுத்தி மக்கள் இந்த செயலியின் மூலம் போலி வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.