போலீஸ் ஏட்டு மனநலம் குன்றியவருக்கு செய்த உதவியால் பொதுமக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதிக்கு அருகில் இருக்கும் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பசியுடன் வெளியில் சுற்றித்திரிவதாக போலீஸ் ஏட்டு முத்துஉடையாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் ஏட்டு அங்கு விரைந்து சென்று சலூன் தொழிலாளியின் உதவியோடு அந்த முதியவருக்கு முடி வெட்டி சவரம் செய்து குளிக்க வைத்துள்ளார். அதன்பின் அந்த முதியவருக்கு மாற்று உடை அணிவித்ததோடு தலைக்கு எண்ணெய் தேய்த்து உணவு வழங்கியுள்ளார். மேலும் போலீஸ் ஏட்டு முத்து கணவாய்பட்டியிலுள்ள முதியோர் இல்லத்தில் அந்த முதியவரை சேர்ந்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் அந்த பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு காவலர் ஏட்டு முத்துஉடையார் தனது சொந்த செலவில் உணவு மற்றும் பொருள்களை அளித்து உதவி வருகிறார். மேலும் போலீஸ் ஏட்டு முத்துவின் சிறப்பான செயலை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.