மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தார். அதே சென்டரில் வேலை செய்த சுதீஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அவை மூடப்பட்டது. இதனால் அவர்கள் வருமானம் இன்றி தவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேரி தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த அறையில் இருவரும் மது அருந்தியதற்கான அடையாளம் இருந்தது. இது குறித்து காதலனிடம் நடத்திய விசாரணையில் வேலை இல்லாத சூழலில் வருமானம் கிடைக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பின்னர் தள்ளிபோனது எனவும் தெரிவித்தார். தன் சொந்த ஊருக்கு செல்ல பணம் கிடைக்காததால் மேரி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.