இயக்குனர் சேரன் இலங்கைத்தமிழர்கள் அமேசான் நிறுவனம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் லண்டனில் உள்ள அமேசான் நிறுவனம் முன்பு தமிழ் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரை நீக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தினை இயக்குனர் சேரன் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் உலகில் உள்ள முக்கியமான நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் அங்கே தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும், அந்தந்த நாட்டில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் அமேசான் நிறுவனம் முன் நடந்த இலங்கைத்தமிழர்களின் ஆர்ப்பாட்டம்… இதுபோல் உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் அங்கே வசிக்கும் தமிழர்கள் தொடர் போராட்டமாக நடத்த இருக்கிறார்கள் அந்த நாட்டின் விதுகளுக்கு உடபட்டு… pic.twitter.com/JU3NopCseB
— Cheran (@directorcheran) June 22, 2021
இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் “தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியாகிய தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், தமிழர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களே தவிர அவர்கள் தீவிரவாதிகள் அல்ல” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் பேசியுள்ளார்.
மேலும் உடனடியாக அமேசான் நிறுவனம் அந்த இணைய தொடரை தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமேசான் நிறுவனத்திற்கு கடிதம் அளித்த போது அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசித்த பிறகு இரண்டு நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். எனவே இரண்டு நாட்களுக்கு பிறகும் முடிவு எடுக்கப்படவில்லை என்றால் தாங்கள் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட உள்ளதாக அந்தப் பெண் வீடியோவில் தெரிவித்துள்ளார்.