சைக்கோ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் களமிறங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான ‘துப்பறிவாளன்’ சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘துப்பறிவாளன் 2’ படத்திலும் விஷால் கதாநாயகனாக நடிக்க இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
உதயநிதி நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வந்த மிஷ்கின், படத்தின் பணிகள் முழுவதையும் முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது விஷால் நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் ஒரு ஷெட்யூலை லண்டனில் 45 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளராம். இதனிடையே படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.