இயக்குனர் சங்கர் தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் குஞ்சுமோனின் திரைப்படத்தை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான, ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். இத்திரைப்படத்தை கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது.
வசூல் சாதனையும் படைத்தது. இதன் மூலம் தான், இயக்குனர் சங்கருக்கு பெயர் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர், ஜீன்ஸ், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் உட்பட பல பிரமாண்ட படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் ஆனார். மேலும், நடிகர் அர்ஜுனின் கெரியரிலும் ஜென்டில் மேன் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் குஞ்சுமோன், ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் அர்ஜுனிடம் கேட்டிருக்கிறார். ஆனால் இருவரும் வேறு திரைப்படத்தில் பணியாற்றி கொண்டிருப்பதாகக் கூறி மறுத்து விட்டார்கள். இயக்குனர் சங்கரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த குஞ்சுமோனின் திரைப்பட வாய்ப்பை அவர் நிராகரித்தது திரையுலக வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் இயக்குனர் சங்கரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும், தன்னை ஏற்றிவிட்ட ஏணியையே அவர் கீழே தள்ளுகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. எனவே, ஜென்டில்மேன் திரைப்படத்தை விட மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை புதுமுகங்களை வைத்து தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டார் குஞ்சுமோன்.