ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தற்பொழுது முதல்வராக உள்ள அசோக் கெலாட் அந்தப் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பம். அதன்படியே கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து அசோக் கெலாட் ஆலோசனை நடத்தி இருந்தார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் அறிவுரைப்படி ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி, அதில் சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வராக அவரை தேர்ந்தெடுக்க சோனியா காந்திக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைமை விரும்பியது.
இதையெல்லாம் அசோக் கெலாட் சரி என ஒத்துக்கொண்டார். ஆனால் ஜெய்ப்பூர் சென்ற பிறகு மொத்த திட்டத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டார். அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட் முதல்வராக கூடாது என வலியுறுத்தி கூட்டமே நடக்காதபடி செய்து விட்டார்கள். இதை தவிர அசோக் கெலாட் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான் அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அவருடைய ஆதரவாளர்கள் ஒருவர் மட்டுமே கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் எனவும், சச்சின் பைலட் அந்த பதவிக்கு வரக்கூடாது எனவும் பல்வேறு நிபந்தனைகளை அவர்கள் விதித்திருக்கிறார்கள்.
இந்த நிபந்தனைகளை ஏற்க விட்டால் நாங்கள் மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம் என 32 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டி உள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அஜய் மார்த்தன் ஜெய்ப்பூரில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார். கட்சி தலைமையின் அறிவுரையை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வில்லை என்கின்ற விவரத்தை சோனியாகாந்தியிடம் தெரிவித்தனர்.
அசோக் கெலாட்டை ஏன் இப்படி செய்தார் என அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவர் நான் ஜெய்ப்பூரில் இல்லை, வெளியூரில் சென்று இருந்தேன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கோபம் காரணமாக இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என மழுப்பலாக பதில் அளித்து இருக்கிறார். ஆகவே கோபமடைந்த சோனியா காந்தி மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அஜய் மார்த்தன் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிக்கை அடிப்படையில் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து அவரை நீக்கவும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.