கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கும், பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சலுக்கான பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை நிபுணரான Dr. Ran Goldman கூறியிருக்கிறார்.
எனவே, ப்ளூ காய்ச்சலை தடுப்பதற்கான தடுப்பூசியை விரைவில் செலுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார். ப்ளூ காய்ச்சலை, தடுப்பூசி மொத்தமாக தடுக்காது. எனினும், மக்கள் அதிகமாக பாதிப்படைவதை தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள், பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தைகள் முதல் அனைத்து மக்களுக்கும் ப்ளூ காய்ச்சலை தடுப்பதற்கான தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.