எண்ணூரில் உத்தரவை மீறி சொந்த ஊருக்கு திரும்ப ரயில் நிலையம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
எண்ணூரில் 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் முறையாக பதிவு செய்து இன்று சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் திரும்பியுள்ளனர். மீதம் இருந்த தொழிலாளர்கள் அனுமதி பெறாமலே சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்தனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த காவல்துறையின் தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கூட்டமாக செல்ல கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால் அதனை மீறி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து ரயில் நிலையம் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அத்திப்பட்டு புதிய மேம்பாலம் அருகே தடுத்தி நிறுத்தினர்.
உங்கள் கோரிக்கைகள் குறித்து மேலிடத்திற்கு தகவல் அளித்துள்ளோம். முறையாக அனுமதி பெற்று சிறப்பு ரயில் மூலம் நீங்கள் அனுப்பி வைக்கப்படுவீர்கள். எனவே தற்போது உங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி செல்லுங்கள் என பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் அந்த தொழிலாளர்கள் கேட்காமல் நடந்து ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர். இதன் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.