மார்ச் மாதம் முதல் இதுவரை மருத்துவமனைகள், தனிமை முகாம்கள், ஆய்வகங்களில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் அளித்துள்ளது.
மேலும், இந்த மருத்துவ கழிவுகள் மூலம், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 46 கிலோ மருத்துவக்கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இந்த மருத்துவக்கழிவுகளை சுத்திகரிப்பு நிறுவனங்களில் உள்ள எரிப்பானில் 1,200 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது. மேலும், இந்த சாம்பல் கும்முடிபூண்டி மட்டும் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு கழிவு மேலாண்மை நிலையங்களுக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதனால் மருத்துவ கழிவுகள் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டுகள், மையங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளவும், சேமிக்கவும், போக்குவரத்து செய்யவும், வெளியேற்றுவதற்கான நெறிமுறைகளை வாரியம் வகுத்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருத்துவக்கழிவுகளை மஞ்சள்நிற 2 அடுக்கு பைகளில் சேகரித்து உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி பெற்று தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் பயன்படுத்திய முகக்கவசங்கள், பாதுகாப்பு கவசங்களை சிறு துண்டுகளாக வெட்டி 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.