தண்டவாளத்தின் மீது காரை நிறுத்திவிட்டு பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் மங்கம்மாள் சாலை பகுதியில் கீர்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் கே. சாத்தனூர் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கீர்த்திகா பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரயில்வே தண்டவாளத்தின் மீது வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசியுள்ளார். இதனை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு கீர்த்திகா கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த நபர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் வந்து தண்டவாளத்தின் மீது ஒரு காரை நிறுத்தியுள்ளார். அதன்பின் அந்த நபர் கீர்த்திகாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் கீர்த்திகா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாக்குவாதம் செய்த நபர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.