இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி நடந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க எம்டிஎம்ஏ எனும் பல்துறை கண்காணிப்பு முகமை நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிபிஐயின் ஒரு பகுதியாக செயல்பட்டது. இந்த விசாரணைக் குழு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி நியமிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் ஆயுட்காலம் பலமுறை நீடிக்கப்பட்ட போதிலும், பெரிதாக பலன் இல்லை. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இங்கிலாந்து, மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு 24 கடிதங்களை விசாரணை அமைப்பு அனுப்பிய நிலையில், 20 கடிதங்களுக்கு மட்டுமே பதில் வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கடந்த மே மாதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும் பல்துறை அமைப்பினை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கடந்த மே மாதமே உத்தரவு பிறக்கப் பட்டிருந்தாலும், தற்போது தான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மத்திய அரசு கூறுகையில், அந்த முகைமையின் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. சில கடிதங்கள் மட்டுமே நிலுவையில் இருக்கிறது. அதை இனி சிபிஐ கவனித்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.