கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சேலம் அடுத்த ஏற்காடு மலை அடிவாரத்தில் இருக்கும் வடமாநில கட்டடத் தொழிலாளர் முகாமில் நேற்று அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை நேரடியாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மாவட்டத்தில் எந்த ஒரு தொழிலாளரும் உணவு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஒடிசா மற்றும் பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள், சேலம் மாவட்டத்தில் 8,600 பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களை வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்