பெரம்பலூர் மாவட்டத்தில் இனி குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குழந்தைத் திருமண சட்டப்படி பெண்களுக்கு 18 வயது மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிரம்பியும் இருக்க வேண்டும்.. அதுவே திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாகும். இந்த வயதிற்கு கீழ் நடக்கும் எந்த ஒரு திருமணமும் சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படுகின்றது.. குழந்தைத் திருமணம் என்பது ஆணுக்கும் நடந்தாலோ அல்லது பெண்களுக்கு நடந்தாலோ குழந்தைகளின் உரிமைகளை அத்துமீறும் செயலாகவே உள்ளது.
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும், அதுபோன்ற திருமணங்கள் நடத்தி வைப்பவர்கள் மீது அதிகபட்ச தண்டனையளிப்பதற்கு இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது..
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து எந்த தகவல் கிடைக்கப் பெற்றாலும், அந்த புகாரினை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க குழந்தை திருமண தடுப்பு அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவது பற்றிய தகவல் கொடுப்பவர்களின் விவரம் மிகவும் இரகசியமாக வைக்கப்படும்..
குழந்தைகளுக்கு எந்த இடத்தில் குழந்தை திருமணம் நடக்கிறதோ, அந்த குழந்தையின் பெற்றோர்கள், காப்பாளர், குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பதற்கு ஊக்குவிப்பவர்கள், அதனை அனுமதிப்பவர், அந்த திருமணத்தை தடுக்க தவறியவர்கள் மற்றும் குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது ரூபாய் 1 லட்சம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பாக புகார்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம் அல்லது குழந்தைகளுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்று அதில் கூறியுள்ளார்.