சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுனராக வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றி வருகிறார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே இருக்கக்கூடிய ஒரு ஹோட்டல் அருகே நடந்து கொண்டு சென்றிருக்கும் போது, கழிவு நீரும் – மழை நீரும் கலந்து சாலையோரமாக தேங்கி இருந்தது. அதே போல அங்கு பாதாள சாக்கடையும் திறந்த நிலையில் இருந்திருக்கிறது.
இதனை அறியாமல் மழை தண்ணீர் தேங்கி இருக்கக் கூடிய சூழ்நிலையில் நரசிம்மன் நடந்து வரும்போது தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்துகிறார்கள்.
அலட்சியம் காரணமாக தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பே இங்கு மழைநீர் தேங்கி இருக்கிறது. அதனை அப்புறப்படுத்தக் கூடிய நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. அதே போல அந்த சாக்கடையை சரியாக மூடாத காரணத்தினாலும் இதுபோன்ற விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகின்றது. இது தொடர்பான விசாரணையும் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்துபோன நரசிம்மன் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக முகப்பேரில் மழைநீர் கால்வாயில் தாய் – மகள் இரண்டு பேர் தவறி விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.