தமிழகத்தில் பண்டிகை காலங்கள் என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தளபதி விஜய், அஜத், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்த வருடம் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் சர்தார் திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இது தவிர நடிகர் அக்ஷய் குமாரின் ராம் சேது, நடிகர் அஜய் தேவகனின் தேங்க் காட், நடிகர் மோகன்லாலின் மான்ஸ்டர், நிவின் பாலியின் படவட்டு போன்ற படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் ரிலீஸ் ஆகிறது.