ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஃபீவர் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்சை எதிர்த்து கனடா வீரர் மிலோஸ் ரவுனிக் ஆடினார்.
இந்தப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஜோகோவிச்சின் கைகள் உயர்ந்தேயிருந்தன. முதல் செட் ஆட்டத்தை 6-4 எனக் கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
ஜோகோவிச்சிற்கு ரவுனிக் சிரமம் ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், முதலிரண்டு செட்களை ஜோகோவிச் எளிதாகக் கைப்பற்றினார்.
பின்னர் நடந்த மூன்றாவது செட் ஆட்டத்தில் தோல்வியைத் தவிர்க்க ரவுனிக் போராடினார். இந்த செட்டில் இரு வீரர்களும் சரிசமமாக ஆட, 6-6 என்ற நிலை வந்தது. பின்னர் டை ப்ரேக்கர் முறையில் 7-1 என கைப்பற்றியதையடுத்து மூன்றாவது செட்டை 7-6 (7-1) எனக் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதிபெற்றார்.