திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி, திமுகவின் பொறுப்பை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவர் அதிமுகவில் இணையப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் நேற்று பரவலாக பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்,
நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லிவிட்டேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டேன். நான் மற்றொரு அரசியல் கட்சியில் இணைவதற்கு தகுதியான அரசியல் கட்சி எதுவும் கிடையாது. பாஜகவுக்கோ, அண்ணா திமுகவுக்கோ எந்த தகுதியும் கிடையாது. நான் அரசியல் கட்சியிலிருந்து விலகி பிற அமைப்புகளோடு செயல்பட விரும்புகின்றேன்.
விவசாயிகள் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட விரும்புகின்றேன். எனவே அரசியல் கட்சியில் இனி இணைய போறது இல்லை. பாரதிய ஜனதா கட்சி மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியினுடைய உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும். நான் வெளியில் இருந்து செயல்பட்டால் தான் என்னால் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க முடியும். இல்லையென்றால் மத்தியில் ஆளுகின்ற பாஜக கட்சிக்கும், மாநிலத்தில் ஆளுகின்ற திமுகவிற்கும் அது சங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்று விளக்கம் அளித்தார்.