வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலில் இன்று திமுக வேட்பாளர்கள் வேட்புமனு அளிக்கிறார்கள்.சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள் .
வடசென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீரசாமி, பழைய வண்ணாரப்பேட்டையில் இருக்கும் மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்திலும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், செனாய்நகரில் இருக்கும் மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகத்திலும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன், அடையாறில் இருக்கும் மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்திலும் தங்களது வேட்புமனு தாக்களை செய்ய இருக்கிறார்கள். மேலும் முக்கிய அரசியல் தலைவர்களான கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எச்.வசந்தகுமார், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.