தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தமிழ்நாட்டின் சட்டசபை கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டமானது, இன்று தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
அதன் பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. அதில் முதல்வருக்கு கவனம் இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில், கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப்பொருட்கள் பழக்கம் இருக்கிறது. அதனை திமுக ஆட்சி தடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரமும் பெருகி விட்டது. கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு, 2500 ரூபாயை அம்மா ஆட்சி மக்களுக்கு கொடுத்தது. தற்போது பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படாதது மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பொங்கல் பரிசு கூட மக்களுக்கு திமுக அரசு கொடுக்கவில்லை. திமுக ஆட்சி ஒழுங்காக செயல்படாததால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. திமுக ஆட்சி, மழையால் சேதமடைந்த பகுதி மக்களுக்கு நிவாரண தொகையையும் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.