தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் சட்டப்பேரவையில் சிஏஏ தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
இதனை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், இஸ்லாமிய அமைப்புகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசப்பட்டவை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். தலைமை செயலாளர் அழைப்பு பேசியது கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் தான் என கூறியுள்ளார். மேலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர், ஹஜ் கமிட்டியின் அபுபக்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.