ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் வலிமைப்படுத்து வதற்காக பாஜக சார்பில் சக்தி கேந்திரா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அரசை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது.
தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக வலிமை வாய்ந்த கட்சியாக மாறும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலும் மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படும் நிலையில் அதில் 10 சதவீதம் மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது. அதன் பிறகு மீதமுள்ள மத்திய அரசின் நிதியை அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.
தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாகவும், அதை விற்பனை செய்யும் மையமாகவும் மாறியுள்ளது. அதோடு மாநில அரசின் உளவுத்துறை செயலிழந்து விட்டதால் தான் கோவையில் கார் வெடி வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக புது வியூகத்தை வகுத்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு சாதகமானவர்களை சேர்த்து வருகிறார்கள்.
இதை கண்டிப்பாக பாஜக வீழ்த்தும். அதன் பிறகு 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் திமுக புதிய கணக்கினை போட்டு வைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது பயிர்களுக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் இருப்பதால் அவர் கடந்த ஆட்சியில் வலியுறுத்திய கோரிக்கையை தற்போது நிறைவேற்றி மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 30,000 ரூபாய் ஒரு ஏக்கருக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் திமுக தற்போது மக்கள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கை இழந்து விட்டது என்றும் கூறினார்.