திமுக தலைவர் முக ஸ்டாலின் முதற்கட்டமாக நாங்குநேரி தொகுதியில் இன்று பரப்புரை பயணம் செய்கிறார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அக்டோபர் 5 -ஆம் தேதி மு.க ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் 10 நாட்கள் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதற்கட்டமாக முக ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார்.