திமுக தலைவர் முக ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மென் பொறியாளரான இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் நீங்கா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்ககூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோரான தந்தை ரவி, தாய் கீதா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் டி ஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.