Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – மக்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுகவை விளாசிய ஸ்டாலின்.!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சியின் அராஜகம், தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் தொடரத்தான் செய்கிறது. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், விருப்பமும், ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்துள்ளார். மானாமதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாகராஜின் மனைவி தோல்வியைத் தழுவியுள்ளார். மண்ணச்சநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவர் தோற்றுள்ளார். சேந்தமங்கலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் மகன் தோற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு, அது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கும் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு உள்ள கோபத்தின் வெளிப்பாடே ஆகும். இதிலிருந்து ஆளுங்கட்சியினர் பாடம் கற்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் இது.

திருநங்கை ரியாவின் வெற்றி, விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறத் தொடங்கியதன் அடையாளம் - ஸ்டாலின்

அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும் வெற்றி பெற்றுள்ளார்கள். கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவரும், வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியான பெண் ஒருவர், தான் வேலை பார்த்த ஊராட்சிக்கே தலைவி ஆனது மக்களாட்சியின் மாண்புக்கு உதாரணம். திருச்செங்கோடு ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா பெற்றுள்ள வெற்றி, விளிம்பு நிலை மக்கள் அதிகாரம் பெறத் தொடங்கியதன் அடையாளம்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |