Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் உரையல்ல… ஆளும்கட்சியின் உரை… கிண்டல் ட்விட் செய்த ஸ்டாலின்..!!

இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என்று மு.க ஸ்டாலின் கிண்டலாக ட்விட் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன.

Image

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக சார்பில் வெளிநடப்புச் செய்துள்ளோம். தமிழ்நாட்டில் கடன்தொகை 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தற்போதுள்ள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பிவைத்துள்ளது.

ஆனால் இதுவரை ஆளுநரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. நாட்டின் மதச்சார்பின்மைக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ள நிலையில் அதிமுக ஆதரித்துள்ளது. தற்போது அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கைத் தமிழர்கள், சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையம், அரசு எந்திரங்கள், காவல் துறையினர் என கூட்டணி அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில், ஆளுநர் உரையின் 56 பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை! எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார். இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்! என்று கேலியும் கிண்டலுமாக பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |