திமுகவின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் நேற்று முடக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களின் அலுவலகங்கள் ,வீடுகள், அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், பொறுப்பாக சோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்களான அவர்கள், தங்களது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்களை குவித்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அமலாக்கத் துறை அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. கடந்த 2002 ஆம் வருடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்தார் என்று பணமோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடக்கவிருக்கும் நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது திமுகவிற்கு சிக்கலை உண்டாக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.