ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 292 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கர்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து எம்எல்ஏவின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை எம்எல்ஏ.க்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.